“திமுக எதிர்க்கும் அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கிறோம்” - சீமான்

திமுகவினர் எங்களை எதிர்த்து போராடுவதில் பெருமைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-24 15:16 GMT
சென்னை,

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க நாம் தமிழர் கட்சி சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர்.

அப்போது அதே பகுதிக்கு வந்த திமுகவினர் சிலர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக குறித்தும் முதல்-அமைச்சர் குறித்தும் இழிவாகப் பேசினால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறி அதே பகுதியில் நின்ற நிலையில் அவர்களை அப்புறப்படுத்த காவல் துறையினர் முயன்றனர்.

அப்போது திமுகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சீமானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய திமுகவினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால்  போலீசாருக்கும் திமுகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் திமுகவினர் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டம் நடைபெறும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு  மேலாக சிறையில் இருக்கும்  கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்கின்றனர், ஆனால் ராஜிவ் கொலை, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

திமுகவினர் தேர்தலின் போது 7 தமிழர் விடுதலை பேசுகின்றனர், இப்போது விடுவிக்க மறுக்கின்றனர் என தெரிவித்த அவர், இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வாய்ப்பு தாருங்கள் என கேட்டதாலேயே இஸ்லாமியர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்தினர் எனவும் தெரிவித்தார். மனிதநேய அடிப்படையில், கருணை  அடிப்படையில் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுகவினர் நாம்தமிழர் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து  போராடுவதில் பெருமைதான். அந்த அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம். அரசியலில் இதெல்லாம் சாதாரணம். தரக்குறைவு பேச்சு என்பதை திமுக பேசக்கூடாது. அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல. பாஜக செய்வதையே தான் திமுகவும் செய்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்