முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் சோதனை; ஆவணங்கள் பறிமுதல்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 15ந்தேதி அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி, கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை என 69 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளன.
இதுதவிர, ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகாவிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் சார்பில் கண்டனம் தெரிவித்து, தி.மு.க. மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் இன்று சோதனை நடத்தியது. நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த சோதனை பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.