இறந்த மகன்... உடலுடன் 4 நாட்களாக வசித்த தாய்...

இரணியல் அருகே இறந்து போன மகன் உடலுடன் 4 நாட்களாக தாய் வசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-12-16 11:52 GMT
திங்கள்சந்தை,

இரணியல் அருகே உள்ள சித்தன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 55). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ஜார்ஜ் தனது வயதான தாய் ரோசம்மாளுடன் வசித்து வந்தார். ரோசம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. 

ஜார்ஜின் சகோதரர் சென்னையில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் ஜார்ஜ் வீடு கடந்த 4 நாட்களாக பூட்டிய நிலையில் கிடந்தது. இதற்கிடையே சென்னையில் வசிக்கும் சகோதரர், ஜார்ஜ் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் ஊரில் உள்ள நண்பரை தொடர்பு கொண்டு, வீட்டுக்கு சென்று சகோதரரை பார்த்து விட்டு வருமாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி அங்கு சென்ற நண்பருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கு ஏதோ விபரீத சம்பவம் நடந்ததை உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது ஜார்ஜ் அழுகிய நிலையில் பிணமாககிடந்தார். அந்த உடலின் அருகில் ஒன்றும் தெரியாதது போல் தாய் ரோசம்மாள் அமர்ந்திருந்தார். இதனையடுத்து போலீசார் ஜார்ஜ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

4 நாட்களுக்கு முன்பு ஜார்ஜ் திடீரென இறந்திருக்கலாம் என்றும், இதனை அறியாத அவரது தாய் ரோசம்மாள், இறந்த மகனின் உடலுடன் வசித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த மகன் உடலுடன் 4 நாட்களாக தாய் வசித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செய்திகள்