திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் வீட்டுமனைக்கு வரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-10 22:58 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு நகராட்சியை சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள தனக்கு சொந்தமான வீட்டுமனைக்கு வரி சான்றுக்காக, திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு மூலம் விண்ணப்பித்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் அந்த மனுவை பரிசீலனை செய்து, வரி விதிப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என அங்கு பணிபுரிந்து வந்த வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கேட்டுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த மனுதாரர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சென்னை பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்ட அதிகாரியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

அதைத்தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். அதை வாங்கி கொண்டு நகராட்சி அலுவலகம் வந்த அவர், வருவாய் பிரிவில் உள்ள வருவாய் ஆய்வாளர் யுவராஜூக்கு கொடுப்பதற்காக அவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வரும் பெண் ஊழியரான தேன்மொழி என்பவரிடம் லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.

அதை வருவாய் ஆய்வாளர் யுவராஜூக்கு கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து, அவர்களிடமிருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீட்டுமனைக்கு வரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மற்றும் அவரது பெண் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்