ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும்: வேதா இல்ல சாவியை பெற்ற உடன் ஜெ.தீபா பேட்டி
வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என தீபா கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி சாவியை ஒப்படைத்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
என் வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. வீட்டை மீட்பதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும்.
என்னைப் பொருத்தவரை இது எப்போதுமே என் அத்தை வீடு; இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதே முதல் பணி. அம்மா அவர்கள் இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை. ஆனால் இப்போதைய அதிமுக தலைவர்கள் இந்த வீடு இல்லை என்றால் அரசியல் இல்லை என்பது போல செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் உள்ள அவரது படத்திற்கு மாதவனும், ஜெ.தீபாவும் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.