நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு இன்று நேரில் ஆய்வு
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு இன்று நேரில் ஆய்வு செய்கிறது.
சென்னை,
தமிழகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய குழுவினர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்துகின்றனர். அவர்களிடம், புயல் ஏற்படுத்திய சேதங்கள் பற்றி படக்காட்சியுடன் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ‘நிவர்’ புயல் வீசியது. இது கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான வாழை, தென்னை போன்ற மரங்கள் சரிந்தன. நெல் உள்ளிட்ட பயிர்கள் நீருக்குள் மூழ்கின. பல கால்நடைகள் இறந்ததோடு வீடுகளும் சேதமடைந்தன.
புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மனோகரன், ரணன்ஜெய் சிங், பர்தெண்டு குமார் சிங், ஓ.பி.சுமன், தர்மவீர் ஜா, பால்பாண்டியன், ஹர்ஷா ஆகிய 7 அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர்.
மத்திய குழுவினர் நேற்று பிற்பகல் 1 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர்கள் தலைமைச்செயலகத்திற்கு பிற்பகலில் வந்தனர்.
அங்கு நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைச்செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து மத்திய குழுவினருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, புயல், மழை சேதங்கள் தொடர்பான விளக்கங்களை அளித்தார். அப்போது வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் அவர்களுக்கு காட்டப்பட்டன.
இன்று (6-ந் தேதி) மத்திய குழுவினர் 2 குழுக்களாகப் பிரிந்து, தமிழகத்தில் புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடச் செல்கிறார்கள். இந்த குழுவினர் தென்சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் ஏற்படுத்திய சேதங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு மதிப்பீடு செய்வார்கள். அவர்களுடன் தமிழக அரசு அதிகாரிகளும் செல்வார்கள்.
மகாபலிபுரத்தில் மதிய உணவு சாப்பிடும் அவர்கள், இன்று பிற்பகல் புதுச்சேரிக்கு செல்கின்றனர். இரவு அங்கு தங்குகின்றனர்.
நாளை (7-ந் தேதி) புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து சேதம் குறித்து விசாரிப்பார்கள். பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். பின்னர் சென்னைக்கு வருகின்றனர்.
இரண்டாவது குழுவின் தொடர்பு அதிகாரியாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 6-ந் தேதி (இன்று) இந்த குழுவினர் வடசென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, புயல் ஏற்படுத்திய சேதங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு மதிப்பீடு செய்வார்கள். பிற்பகலில் வேலூர் புறப்படும் அவர்கள், இரவில் அங்கு தங்குகின்றனர்.
7-ந் தேதி (நாளை) காலையில் இருந்து மாலை வரை வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து சேதம் குறித்து விசாரிப்பார்கள். பின்னர் அங்கிருந்து மாலையில் சென்னைக்கு புறப்படுகின்றனர். இரவில் சென்னையில் தங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு சேதங்களின் விவரங்களை குறிப்பெடுத்துக்கொள்ளும் மத்திய குழுவினர், 8-ந் தேதி காலை தலைமைச்செயலகத்துக்கு வருகின்றனர். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.