ரஜினி கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2020-12-03 21:30 GMT
சென்னை,

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை தலைதூக்க விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனின் நோக்கம். 2021-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர உழைப்போம்.

அரசியல் கட்சி தொடங்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அவரது கட்சியின் கொள்கை, லட்சியத்தை அறிவித்தால்தான் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என ரஜினி தெரிவித்து இருப்பது தி.மு.க.வை சுட்டிக்காட்டிதான். தி.மு.க. ஆட்சி செய்த காலங்களில் விவசாயிகளின் உரிமைகளை பறித்துவிட்டு தற்போது, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை போல காட்டிக்கொள்ள வருகிற 5-ந் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. போராட்டம் அறிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க.தான் என்றும் விவசாயிகளின் நண்பன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்