விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் - நடிகர் கார்த்தி அறிக்கை

டெல்லியில் போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-12-03 15:40 GMT
சென்னை,

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து 8வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கார்த்தி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், டெல்லியில் போராடும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது;-

“கொரோனா அச்சத்தையும், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ‘உழவன்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் ஒரு வாரமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். வரலாறு காணாத இந்த போராட்டத்தில் பெண்களும் பெருந்திரளாக பங்கெடுத்து போராடி வருகின்றனர்.

ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பாதிப்படைவோம் என்று கருதுகிறார்கள்.

ஆகவே டெல்லியில் போராடும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அந்த அறிக்கையில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்