ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ஒப்படைக்க பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்ட உத்தரவை பின்பற்றி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே பல கல்லூரிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடத்தப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தகவல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் வகையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழ்களின் நகல்களை மட்டும் கல்லூரி நிர்வாகம் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட உள்ளன. தகுதி இல்லாத ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரிகளில் பணி நியமனங்கள் முறையாக நடைபெற வேண்டும் எனவும், கல்லூரிகளின் அனைத்து நிர்வாக நடைமுறைகளிலும் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.