தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள விவகாரத்தில் தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்
தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள விவகாரத்தில் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை
தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள விவகாரத்தில் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- "தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியைத் தங்கள் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படை அத்துமீறி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றது. நூற்றுக்கணக்கானவர்களைப் பிடித்துக்கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு மீன்பிடிப் படகும் 25 முதல் 40 லட்சம் பெறுமதியானவை. தமிழக மீனவர்கள் கடன் வாங்கி, அதற்காக வட்டி கட்டி வருகின்றார்கள். அந்தப் படகுகள்தான் அவர்களது வாழ்வாதாரம். மத்திய வெளியுறவுத்துறை
இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்குமாறு கோரி, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் நான் தொடர்ச்சியாகத் தங்களிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்துள்ளேன். ஆனால், பயன் எதுவும் இல்லை.
இப்போது, 121 படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எனவே, இந்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தப் படகுகளை மீட்டுத் தர வேண்டும். அல்லது, அதற்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும். தாங்கள் இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.