தமிழகத்துக்கான இழப்பீட்டு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்; ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

கொரோனாவை எதிர்த்து போராடுவதற்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

Update: 2020-10-05 22:45 GMT
சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் காணொலி காட்சி மூலம் 42-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது.

இதில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், வணிகவரி கமிஷனர் எம்.ஏ.சித்திக் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

2017-18-ம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தனது அறிக்கையை முடிவு செய்து, தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவையாக ரூ.4 ஆயிரத்து 321 கோடி வழங்கப்படவேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளது. அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நிலுவை தொகையினை ஒரே தவணையில் உடனடியாக வழங்க வேண்டும். இது கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதிசுமையை குறைக்க மாநிலத்திற்கு பேருதவியாக இருக்கும்.

எனவே அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அதை செயல்படுத்தி நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கு 2020-21-ம் ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு ரூ.12,258.94 கோடி இழப்பீடு வழங்கவேண்டியுள்ளது. கொரோனாவை எதிர்த்து போராட ஜி.எஸ்.டி. வரி இழப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக வழங்குவது மிகவும் அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிலுவைத்தொகையை வழங்க மத்திய அரசுக்கு தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமை உள்ளது.

மேல்வரி வசூலில் பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலங்களுக்கு ஈடுசெய்ய தேவையான நிதியை இந்திய அரசு அடையாளம் காணவேண்டும் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டி, கடந்த கூட்டத்தின் வாயிலாக, இந்திய அரசு நிதி ஆதாரங்களை திரட்டி, தேவையான நிதியை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிதியத்திற்கு வழங்க முடியும் என்று நான் பரிந்துரைத்தேன்.

2021-22-ம் ஆண்டிற்கு பிறகும் சில ஆண்டுகளுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் மேல்வரியை நீட்டித்து கடனை வழங்க முடியும். இது அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட ஒரு நியாயமான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய ஆலோசனையாகும். இதன் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2020-21-ம் ஆண்டில் மொத்த கடன் தொகையை கட்டுப்படுத்தும் முயற்சியில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செயல்படுத்தல் தொடர்பான இழப்புகள் மற்றும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு இடையே ஒரு வேறுபாடு உருவாக்கப்பட்டது. இந்த நிலைப்பாடு மத்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலுவை பற்றாக்குறையை அடுத்தடுத்த ஆண்டுகளில் சரி செய்ய இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு மாநிலங்களுக்கு உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

இழப்பீடு தொகையை முழுமையாக நடப்பு நிதியாண்டில் விடுவிப்பது சாத்தியமில்லை. ஆனால் இந்த இழப்பீட்டிற்கான கணக்கீடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பினை மட்டும் அடிப்படையாக கொள்ளாமல், நடப்பு நிதி நிலைமையையும் கருத்தில் கொள்ளவேண்டும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் அடித்தளமாக இருக்கும் பரஸ்பர நம்பிக்கையை பாதுகாத்து, உரிய நேரத்தில் மாநிலத்திற்கு இழப்பீடு வழங்குவதிலும், ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் நிலுவை தொகையை விரைவாக அளித்திடவும் உங்கள் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்