கோளாறு குறித்து கண்டறிய பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயிலை இயக்கி ஆய்வு

பாம்பன் தூக்குப்பாலத்தில் 22 பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2020-10-04 21:30 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே கடலுக்குள் அமைந்துள்ள நூற்றாண்டுகளை கடந்த பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் அதன் உறுதித்தன்மை குறித்து கண்டறிய ஐ.ஐ.டி. குழு மூலம் தூக்குப்பாலத்தை சுற்றி 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ராமேசுவரம்- சென்னை சிறப்பு ரெயில் சென்றபோது தூக்கு பாலத்தில் சென்சார் பொருத்தப்பட்டுள்ள ஒரு பகுதியில் இருந்து சத்தம் வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே பொறியாளர் குழுவினர் தூக்குப்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அந்த கோளாறு குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை.

அதைத்தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய ரெயில் பயணிகள் இல்லாமல் வெறும் பெட்டிகளுடன் தூக்கு பாலம் வழியாக இயக்கப்பட்டு மண்டபம் கொண்டு செல்லப்பட்டு அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று தென்னக ரெயில்வே பொறியாளர் குழுவினர் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து 3 மணி நேரத்திற்கு மேல் தூக்கு பாலத்தில் சத்தம் கேட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து ராமேசுவரத்தில் இருந்து 22 பெட்டிகளுடன் பயணிகள் யாரும் இல்லாமல் தூக்கு பாலம் வழியாக ரெயில் இயக்கப்பட்டு பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கண்டறிவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த ரெயில் பெட்டிகள் தூக்கு பாலத்தில் பலமுறை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. பெட்டிகளுடன் ரெயில் செல்லும்போது தூக்கு பாலத்தில் ஏற்படும் அதிர்வு மற்றும் பாதிப்புகள் குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குபின் ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். அது குறித்து முழுமையாக எதுவும் தெரிவிக்க முடியாது. தொடர்ந்து ஆய்வு நடத்த உள்ளோம். தூக்குப்பாலம் வழியாக பயணிகளுடன் ரெயில் இயக்குவது குறித்து எதுவும் தற்போதைக்கு கூற முடியாது” என்றனர்.

மேலும் செய்திகள்