மதுரை மாணவியின் தற்கொலைக்கு அதிமுக மற்றும் பாஜக அரசுகளே காரணம் - உதயநிதி ஸ்டாலின்
மதுரை மாணவியின் தற்கொலைக்கு அதிமுக மற்றும் பாஜக அரசுகளே காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமா என்ற அச்சத்தின் காரணமாக மதுரையை சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாணவியின் தற்கொலைக்கு அதிமுக மற்றும் பாஜக அரசுகளே காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மதுரை மாணவியின் தற்கொலைக்கு அதிமுக மற்றும் பாஜக அரசுகளே காரணம். கடந்த 4 ஆண்டுகளில் 10 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. நீட் தேர்வை மாணவர்கள் தைரியமாக எழுத வேண்டும். இன்னும் 8 மாதத்தில் கண்டிப்பாக மாணவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்” என்று தெரிவித்தார்.