ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் - திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
"திமுகவின் சிறப்பான வரலாற்றில் ஒரு பொருள் செறிந்த நாளாக மாறியிருக்கிறது செப்டம்பர் 9. திமுக தொண்டர்களுக்கு செப்டம்பர் மாதம் எப்போதுமே களிப்பும் ஊக்கமும் தரும் மாதம்தான்! செப்டம்பர் 15, அண்ணாவின் பிறந்த நாள். செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாள். அதே நாள்தான், திமுகவும் பிறந்த நாள்!
எனவே, முப்பெரும் விழாவாக அதனை நாம் கொண்டாடி மகிழ்வது வழக்கம். திருவிழாவுக்கு முன் பந்தற்கால் நடுவது போல, இந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, நேற்றைய செப்டம்பர் 9 சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.
நம் உயிர்நிகர் தலைவரின் கொள்கைச் சகோதரனாகத் துணை நின்று, தோள் தந்து, நிழல் வழங்கிய க.அன்பழகன் மறைவெய்திய நிலையில், அவர் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்புக்கு துரைமுருகன் நேற்று ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றார்.
துரைமுருகன் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்றதால், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றிருக்கிறார். திமுகவின் தலைமைப் பொறுப்பில் உங்களால் அமரவைக்கப்பட்டிருக்கிற நானும், பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகனும், பொருளாளராகத் தேர்வாகியுள்ள டி.ஆர்.பாலுவும் மிசா சிறைவாசிகள்.
திமுக அமைப்பில் இ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக உள்ள நிலையில், திமுகவின் ரத்தநாளங்களான தொண்டர்களின் பேராதரவுடன் க.பொன்முடியும், ஆ.ராசாவும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு செயலாற்றி வருகிறார்.
எந்தப் பொறுப்பில் இருந்தாலும், திமுகவின் உறுப்பினர் என்பதே எல்லாவற்றையும்விட மதிப்புக்குரிய பொறுப்பு. தொண்டர்களே இந்த இயக்கத்தின் அடிப்படை வலிமை. அதனை உணர்த்தும் வகையில் திமுகவின் முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி தொடங்கிப் பல முன்னோடிகளும் வாழ்த்துரை வழங்கினார்கள். நாம் கூடிக் கலையும் சாதாரணக் கூட்டமல்ல; கூடிப் பொழியும் மழை மேகம்.
உங்களில் ஒருவனாக இந்தத் தீர்மானங்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவற்றை நிறைவேற்றிடும் வகையில் உங்கள் உழைப்பைத் தாருங்கள். ஒருங்கிணைந்து செயலாற்றுங்கள். திமுகவின் மீது காழ்ப்புணர்வு கொண்டு வெறும் வாயை மெல்லுகின்றவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களைத் தவிர்த்து, மக்களிடம் சென்று களப்பணிகளை மேற்கொள்ளுங்கள்.
அடுத்து அமையவிருப்பது திமுக அரசுதான் என்ற மக்கள் மனதில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, வாக்குப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றிட சூளுரைத்துக் களம் காணுங்கள். 7 மாதங்களில் திமுக ஆட்சி எனும் இலக்கை அடைந்து, அதனை நம் உயிர்நிகர் தலைவரின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்குகின்ற வெற்றித் திருநாள் வரை நமக்கு ஓய்வில்லை".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.