‘பிளாக்மார்க்’ தண்டனை பெற்ற போலீஸ் ஏட்டுக்கு பதவி உயர்வு வழங்காதது சரியானது - ஐகோர்ட்டு உத்தரவு

பிளாக்மார்க் தண்டனை பெற்ற போலீஸ் ஏட்டுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி வழங்க மறுத்த போலீஸ் சூப்பிரண்டு முடிவு சரியானது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-09 22:13 GMT
சென்னை, 

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால். இவர், 1976-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, 1998-ம் ஆண்டு போலீஸ் ஏட்டாக (தலைமை காவலராக) பதவி உயர்வு பெற்றார். இதன்பின்னர், 2008-ம் ஆண்டு இவருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், ‘பிளாக்மார்க்’ தண்டனை பெற்று இருப்பதால், இவருக்கு பதவி உயர்வு வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், சேலம் டி.ஐ.ஜி.யும் மறுத்து விட்டனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல், “காவல்துறையில் தலைமை காவலர்கள் அதற்கு கீழ் உள்ள, காவலர்கள் ஆகியோருக்ரு வழங்கப்படும் ‘பிளாக்மார்க்’ தண்டனை என்பது மிகப்பெரிய விஷயம் இல்லை. அது சாதாரணமானவை.

இதை கருத்தில் கொண்டு பதவி உயர்வு வழங்க உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர். 34 ஆண்டு பணியில், சிறப்பாக பணியாற்றியதற்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து 45 வெகுமானங்களை (ரிவார்டுகளை) மனுதாரர் பெற்றுள்ளார். எனவே, அவருக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார். அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், “மனுதாரர் தரப்பில் ‘பிளாக்மார்க்’ தண்டனை என்பது ஒரு தண்டனையே கிடையாது. காவல்துறையில் இது சாதாரணமானது. இந்த ஒரு தண்டனையை தவிர, 34 ஆண்டு பணியில் அவர் வேறு எந்த தண்டனையும் பெறவில்லை. அதனால் அவருக்கு பதவி உயர்வு வழங்க கருணை காட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும் தலைமை காவலர்கள் எந்த குற்றச்சாட்டிலும் சிக்கியிருக்க கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை பணி விதிகள் கூறுகின்றன.

அதுமட்டுமல்ல மனுதாரருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் தீவிரமானது. லஞ்சம் வாங்கிக் கொண்டு சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமும் உள்ளது. எனவே, ‘பிளாக்மார்க்’ தண்டனையும், தண்டனை தான். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து உயர் அதிகாரிகள் எடுத்த முடிவு சரியானது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்