ஆசிரியர்கள் நியமனத்தில் விதிமீறல் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை மாற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர்கள் நியமனத்தில் விதிமீறல் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை மாற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்ததி உள்ளார்.

Update: 2020-05-21 19:49 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றியாகும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை பா.ம.க. புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய பிறகும் கூட அதை சரி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வரவில்லை. வேதியியல் பாட ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை புதிதாக தயாரித்து வெளியிட வேண்டும். அதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேருக்கு கூடுதலாக பணி கிடைப்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதி செய்ய வேண்டும். சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை அப்பதவியில் இருந்து மாற்ற வேண்டும். அரசுப் பணி தேர்வாணையங்களில் சமூகநீதிக்கு ஆதரவான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்