வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான ரெயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும்
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான ரெயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்த முடிவெடுத்துள்ளது.
சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2 நாட்களாக சில மாவட்டங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் மூலம் அனுப்பப்படுகின்றனர். வேலை இல்லாத நிலையில் வெளிமாநில தொழிலாளர்களிடம் தற்போது ரெயில் கட்டணத்துக்கான பணம் இருக்காது அவர்களுக்கான பயண கட்டணத்தை அவர்கள் சேர்ந்த மாநில அரசுகளே செலுத்தலாம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பல மாநிலங்கள் தொகையை செலுத்தாத நிலையில் தற்போது தமிழக அரசே செலுத்த முடிவெடுத்துள்ளது.
அதன்படி, இடம் பெயர்ந்து வந்த தொழிலாளியோ அல்லது அவர் சார்ந்த மாநிலமோ பயணத்துக்கான ரெயில் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை தராத பட்சத்தில் அதை தமிழக அரசே ஏற்கும். அந்தத் தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். அவர்களுக்கான குடிநீர், உணவு ஆகியவற்றையும் மாநில அரசே வழங்கும்.
வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு, வீட்டில் தனிமைப்படும் வசதி இல்லாத பட்சத்தில், கண்டிப்பாக அரசு சார்பிலான தனிமைப்படுத்தும் மையத்தில் 14 நாட்கள் வைக்கப்படுவார்கள். அவர்கள் இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டு இரண்டும் நெகட்டிவ் என்ற முடிவு வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.