ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி: சென்னையில், பெரும்பாலான கடைகள் திறப்பு - இயல்புநிலை திரும்புகிறது

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதின் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் இயல்புநிலை மெல்லமெல்ல திரும்ப தொடங்கி இருக்கிறது.

Update: 2020-05-04 22:00 GMT
சென்னை, 

கொரோனா பீதி காரணமாக உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் 3-ம் கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தி இருக்கிறது. அதன்படி, கடந்த 40 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள் நேற்று அமலானது.

தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் இருந்த நிலையை ஒப்பிடுகையில் நேற்றைய நிலவரம் மாறியிருந்தது. இதுநாள் வரை மூடப்பட்டிருந்த சிறிய உணவகங்கள், பெயிண்ட் விற்பனை கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், சிறிய துணிக்கடைகள், செருப்பு கடைகள், ஸ்டேசனரி கடைகள், செல்போன் கடைகள், மென்பொருள் கடைகள் என பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டன.

பெரும்பாலான கடைகள் திறப்பு

அதேவேளையில் பெரிய பெரிய வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்படவில்லை. குறிப்பாக நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் எதுவும் செயல்படவில்லை. கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமெண்ட், இரும்பு, மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தனித்து செயல்பட்டு வந்த சில மென்பொருள் கடைகள், செல்போன் கடைகள், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகளும் திறக்கப்பட்டன.

நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்ட மகிழ்ச்சியில் கடவுளை வேண்டி அதன் உரிமையாளர்கள் பயபக்தியுடன் கடைகளை திறந்ததை பார்க்க முடிந்தது. பெரிய பெரிய நிறுவனங்களின் வாசல்களை தற்காலிக காய்கறி-பழக்கடைகள் ஆக்கிரமித்திருந்தன. பரபரப்புடன் காணப்படும் கோயம்பேடு, தியாகராயநகர், பெரம்பூர், வியாசர்பாடி, திரு.வி.க.நகர், வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை, பாரிமுனை, தேனாம்பேட்டை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

பெரும்பாலான கடைகள் திறந்திருந்தாலும் மக்கள் கூட்டம் ஓரளவே காணப்பட்டன. குறிப்பாக எலக்ட்ரானிக் கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. ஊரடங்கு காலத்தில் வீடுகளில் உடைந்த மின் சாதனங்கள் மற்றும் ரிமோட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

அதேபோல செல்போன் கடைகளிலும் ஓரளவு கூட்டம் காணப்பட்டது. ஏராளமானோர் செல்போனில் ஒட்டக்கூடிய ‘டெம்பர் கிளாஸ்’ போன்றவற்றை அதிகமாக வாங்கி சென்றனர். அதேபோல சிறிய துணிக்கடைகளிலும் மக்கள் காணப்பட்டனர்.

ஊரடங்கு காலத்தில் முடங்கியிருந்த பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதேவேளை கடைகள் செயல்படும் நேரமும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியிருக்கிறது.

கொரோனா பீதி காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் சாலைகளில் நடமாடிய மக்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிந்திருப்பதை பார்க்க முடிந்தது.

மேலும் செய்திகள்