60 வயதிற்கு மேற்பட்டோர் உடல் நலனில் தனி கவனம் செலுத்துங்கள் - தமிழக அரசு வேண்டுகோள்

60 வயதிற்கு மேற்பட்டோர் உடல் நலனில் தனி கவனம் செலுத்துங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2020-03-31 20:36 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும். இந்நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் 2 வகையில் பரவுகிறது. நோய் அறிகுறி கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த் திவலைகள் காற்றின் மூலம் அருகில் உள்ள நபர்களுக்கு நேரடியாக பரவுகிறது. இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. எனவே, தமிழ்நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் நோய் தொற்று வராமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

* வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து தனித்து இருத்தல் வேண்டும்.

* சமூக இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

* கைகளை சோப்பால் அவ்வப்பொழுது கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

* வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், வெளி நபர்களுடன் கலந்துரையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.

* உற்றார், உறவினர் மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடி மகிழலாம்.

104 அவசர தொலைபேசி எண்

* மருத்துவர்களின் ஆலோசனைப்படி தாங்கள் அன்றாடம் உட்கொள்ளும் மருந்துகளை வேளை தவறாது எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

* சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்த அளவையும் கட்டுக்குள் வைத்திருத்தல் வேண்டும்.

* காற்றோட்டமான அறைகளை பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை குளிரூட்டிகளை (ஏ.சி.) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

*வெதுவெதுப்பான தண்ணீரினை அவ்வப்போது அருந்த வேண்டும்.

* தொண்டை வலி, காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் 104 அவசர தொலைபேசி எண் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 120 555550-ல் தொடர்பு கொள்ளலாம். தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்