ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடக்கும் கணக்கெடுப்பில் ஒத்துழைக்க வேண்டாம் - முஸ்லிம்கள் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தொடர் போராட்டத்தை தள்ளிவையுங்கள் என்றும், ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடக்கும் கணக்கெடுப்பில் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் முஸ்லிம்கள் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மண்ணடியில் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்தார். அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உங்களை நான் முன்கூட்டியே வந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால், மிகவும் லேட்டாக வந்திருக்கிறேன். லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறேன். நான் ஏன் வந்திருக்கிறேன் என்றால், எங்களைப் போன்றவர்கள் உங்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாக ஒரு தவறான பிரசாரத்தை பலர் செய்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிடக்கூடாது என்று தான் கூடுமான வரையில் தவிர்த்துக்கொண்டு வந்தேன். நான் தவிர்த்திருந்தாலும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உங்களை வந்து சந்தித்து, உங்களுக்கு ஆறுதல் தருகின்ற நிலையில் இருந்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நான் உங்களை பெருமைப்படுத்த மட்டும் வரவில்லை. உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை எடுத்துவைப்பதற்காக வந்திருக்கிறேன். இன்றைக்கு மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி குடியுரிமைத் திருத்தச்சட்டம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து, அதன் மூலமாக என்.பி.ஆர்., என்.ஆர்.சி. என்கிற சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தச் சட்டத் திருத்தம் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மட்டும் ஏற்பட்ட இன்னல்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட துன்பம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
குடியுரிமை திருத்த சட்டத்தால் யார் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், எந்த நிலையில் பாதிக்கப்படுகிறார்கள்? என்று சட்டமன்றத்தில் விரிவாகப் பேசினேன். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிகிறது.
நான் உங்களை எல்லாம் பணிவோடு, உரிமையோடு வேண்டி கேட்டுக்கொள்ள விரும்புவது ஏப்ரல் 1-ந்தேதி முதல் கணக்கெடுப்பு நடத்த போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தயவு செய்து இந்த போராட்டத்தை நீங்கள் தள்ளிவையுங்கள். போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு, ஏப்ரல் 1-ந்தேதி முதல் கணக்கெடுப்பு எடுக்க வரும்போது யாருமே அதற்கு ஒத்துழைக்க மாட்டோம், துணை நிற்க மாட்டோம் எனக் கூறி ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால், தி.மு.க. அதற்கு உங்களுக்கு துணை நிற்க காத்திருக்கிறது.
எனவே நீங்கள் உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம். தொடர்ந்து போராட்டம் நடத்தும் சூழல் வரும். அந்த போராட்டத்திற்கு தி.மு.க. உங்களுக்கு என்றும் பக்கபலமாக இருக்கும். இந்த அளவுக்கு போராடி, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். உள்ளபடியே அதற்கு அடிபணிந்து வணங்கக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். எனவே தயவு செய்து சிந்தித்து நல்ல முடிவை எடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.