குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-28 08:10 GMT
சென்னை,

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது; - “எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினருமான காத்தவராயன் திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக, மாவட்டப் பிரதிநிதியாகப் பணியாற்றிய அவர் - தற்போது மாவட்ட துணை செயலாளராக இருந்தார். கடைக்கோடி தொண்டனிடமும் கனிவுடன் பழகும் மனித நேயமிக்க பண்பாளர். பேரணாம்பட்டு நகரத் தலைவராகப் பணியாற்றி - மக்கள் மனம் கோணாமல் பல்வேறு சமுதாயப் பணிகளையாற்றி கட்சிக்கு அந்தப் பகுதியில் நற்பெயர் சம்பாதித்துக் கொடுத்தவர்.

குடியாத்தம் இடைத்தேர்தலில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று - திமுக சட்டப்பேரவை உறுப்பினராக அமோக வெற்றி பெற்ற அவர் தொகுதி பிரச்சினைகளை சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமாக தொகுத்து வாதாடி அவையில் இருந்தவர்களை எல்லாம் வியக்க வைத்தவர். அவரது வாதத் திறமையை நேரில் கண்ட நான் - அவரை என்னருகில் அழைத்துப் பாராட்டியது இன்றும் என் கண் முன் வந்து நிழலாடுகிறது.

காத்தவராயனுக்கு “கட்சிப் பணியும்” “மக்கள் பணியும்” இரு கண்கள் என்பதை நானறிவேன். என்றைக்கும் கலைஞர் மீது நீங்காப் பற்று வைத்திருந்த அவர் - திமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் அசைக்க முடியாத தூணாக குடியாத்தம் பகுதியில் விளங்கியவர். என்னுடன் பணியாற்றி வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களில் நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்குப் பேரிழப்பு. 

இந்த துயரம் மிகுந்த தருணத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்