அரசின் கல்வி தொலைக்காட்சி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மீதான ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-09 22:15 GMT
மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் அருண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக தமிழின் முக்கியத்துவத்தை பெற்றோர், மாணவர்களுக்கு எடுத்து சொல்லி, தமிழ் வழிக்கல்வியை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு டிரஸ்ட் மூலமாக ஈடுபட்டு வருகிறேன். தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக் காட்சி தொடங்கப்பட்டது. இந்த சேனலானது ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒருங்கிணைப்பாளர்

இந்த கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளராக அமலன் ஜெரோம் நியமிக்கப்பட்டார். கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பல திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின்படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான சி.டி. தயாரிப்பு பணியை அமலன் ஜெரோமின் மனைவி நடத்தி வரும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

வழக்குப்பதிவு

கற்றல் திறன் தொடர்பான வீடியோவை இந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்தது. இதுதொடர்பாக அமலன் ஜெரோம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

எனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமலன்ஜெரோமை கல்வி தொலைக்காட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பது சட்டவிரோதம். எனவே அவரை ஒருங்கிணைப்பாளர் பணியில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பணியில் இருந்து விடுவிப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆஜராகி, ’அமலன் ஜெரோம், ஏற்கனவே சேலம் மாவட்டம் கொளத்தூர் தாலுகா எஸ்.எஸ்.காட்டுவளவு பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த பணிக்கு கடந்த 4 ஆண்டுகளாக செல்லாமல் உள்ளார்‘ என்று வாதாடினர்.

விடுவிப்பு

அப்போது அரசு வக்கீல் ஸ்ரீமதி ஆஜராகி, ’ஊழல் விவகாரம் காரணமாக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து கடந்த 7-ந்தேதி அமலன் ஜெரோம் விடுவிக்கப்பட்டுள்ளார்‘ என்றார்.

பின்னர் அது தொடர்பான உத்தரவு நகலையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், அமலன்ஜெரோம் மீதான ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு ஆகியோர் சட்டத்துக்கு உட்பட்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்