தென்மேற்கு பருவமழை தீவிரம்: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், நீலகிரி, கோவையில் இன்று (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Update: 2019-08-06 22:00 GMT
சென்னை,

தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனியில் ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலையாளர் விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி, கோவை

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களை சார்ந்த பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இயல்பை விட குறைவு

தென்மேற்கு பருவமழை காலமான கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் 14.4 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 9.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 32 சதவீதம் குறைவு ஆகும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

அவலஞ்சி 18 செ.மீ., வால்பாறை 14 செ.மீ., ஜி பஜார், மேல் பவானியில் தலா 11 செ.மீ., சின்னக்கலாறு 10 செ.மீ., தேவாலா 8 செ.மீ., நடுவட்டம், வால்பாறை தாலுகா அலுவலகத்தில் தலா 6 செ.மீ., ஊட்டி 5 செ.மீ., பெரியார், பாபநாசம்(நெல்லை), செங்கோட்டையில் தலா 4 செ.மீ., கே பிரிட்ஜ், தென்காசி, மாமல்லபுரத்தில் தலா 3 செ.மீ., காஞ்சீபுரம், கேளம்பாக்கத்தில் தலா 2 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடகிழக்கு வங்கக்கடலில் மேற்கு வங்காள மாநிலம் டிக்ஹாவிற்கு 130 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாலசூருக்கு 160 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியது. பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறி ஒடிசா-மேற்கு வங்காளத்துக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடலூர், பாம்பன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகங்களில் தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில் 1-ம் எண் கூண்டுகள் நேற்று ஏற்றப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்