வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தமிழகம் முழுவதும் வெள்ளம் பாதிக்கக் கூடிய பகுதிகளில் அமைக்கப்படும் நிவாரண முகாம்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள், வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகள் மூலம் மீட்பது, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு கொடுக்கப்பட்டு எவ்வாறு துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.