வங்கி கடன் மோசடி வழக்கு: அரசு ஒப்பந்ததாரருக்கு 5 ஆண்டு சிறை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

வங்கி கடன் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-07-31 20:30 GMT

சென்னை,

வங்கி கடன் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அரசு ஒப்பந்ததாரர்

சென்னை அசோக்நகர் சவுந்திரபாண்டியன் சாலையில் வசித்து வந்தவர் முத்தையா. அரசு ஒப்பந்ததாரர். கடந்த 2001–2006–ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான இடம், முத்தையாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் பள்ளி நடத்துவதற்காக கட்டிடம் கட்ட உள்ளதாக கூறி பரோடா வங்கி, ரெப்கோ வங்கி ஆகியவற்றில் முத்தையா பல லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால், இந்த கடன் தொகையை கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தாமல் சொந்த தொழிலுக்கு பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

வங்கி கடன் மோசடி

இதேபோன்று, முத்தையா தனக்கு சொந்தமான சொத்தை அடமானமாக வைத்து பரோடா வங்கியில் கடன் பெற்றுள்ளார். இதே ஆவணங்கள் மூலம் ரெப்கோ வங்கியிலும் ரூ.97 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

ரெப்கோ வங்கியில் பெற்ற கடனை மறைத்து விட்டு, அதே ஆவணங்களை கொண்டு யூனியன் வங்கியில் கடன் பெற்று பரோடா வங்கியில் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்தி விட்டார். ஆனால், ரெப்கோ வங்கியில் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி முத்தையா மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக பரோடா வங்கியின் மண்டல தலைமை மேலாளராக இருந்த கைலாசம், ரெப்கோ வங்கி துணை பொது மேலாளர் ராமசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி எஸ்.ஜவகர் முன்னிலையில் நடந்தது. சி.பி.ஐ. தரப்பில் மூத்த வக்கீல் எம்.வி.தினகர் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட முத்தையா, வங்கி மேலாளர் கைலாசம் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், முத்தையாவுக்கு ரூ.20 லட்சமும், கைலாசத்துக்கு ரூ.15 லட்சமும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், ரெப்கோ வங்கி துணை பொது மேலாளர் ராமசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

முத்தையா, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்