ஆடி அமாவாசை: லட்சக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆறுகள், கடல்களில் இன்று லட்சக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Update: 2019-07-31 07:50 GMT
சென்னை,

இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசையன்று கடலில் நீராடி, தர்ப்பணம் செய்து வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இதனால் ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்  செய்து வருகின்றனர்.  இந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் கடலில் நீராடியபின், எள் மற்றும் தண்ணீரை கொண்டு தர்ப்பணம் செய்தனர்.

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அதிகாலை முதல் நூற்றுக்கணக்கானோர் நீராடிவிட்டு, மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு வேத விற்பன்னர்கள் மூலம் பலி கர்மம் செய்தனர். முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெற வேண்டி பகவதி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்கள் முன்னோர்களை நினைத்து திதி கொடுக்க ஏராளமானோர் இன்று திரண்டனர்.

காசிக்கு நிகரான புனித தலமாக கூறப்படும் திருவாரூர் கமலாலய தீர்த்த குளத்தில் அரிசி, தேங்காய், பழம் ஆகியவற்றை வைத்து திதி கொடுத்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தனர். அதிகாலையில் அக்னிதீர்த்தக் கடலில் பித்துருக்களுக்கு பிண்டம், எள் வைத்து முன்னோர்களுக்கு பூஜை செய்தனர்.

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் பக்தர்கள் குவிய தொடங்கினர். மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்களுக்காக ஆங்காங்கே மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி:  ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் காவிரி கரையோர பகுதிகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல் தென்காசி, தூத்துக்குடி , நாகை மாவட்டம் வேதாரண்யம், ஈரோடு பவானி கூடுதுறை உள்ளிட்ட ஊர்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்