அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் : சட்டசபையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Update: 2019-07-02 23:32 GMT
சென்னை, 

தமிழக சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்த துறையின் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்தார். அதன் பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் அந்தக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20-ம் ஆண்டு தொடங்கப்படும்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நிர்வாகம் மற்றும் கல்விசார் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும்.

சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள மகளிர் விடுதியை புதுப்பித்தல், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், கூடுதலாக புதிய மகளிர் விடுதி கட்டிடம் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் வழிகாட்டுதல்களின்படி இணையவழி கல்வித் திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கற்போர் உதவி மையங்கள் மற்றும் தேர்வு மையங்கள் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிறுவப்படும்.

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் 100 பட்டயப் படிப்பு மாணவர்களின் திறனை உலகளாவிய அளவில் மேம்படுத்தும் வகையில் அயல்நாட்டு தொழில்நுட்ப பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

பொறியியல் பட்டதாரி மாணவர்களின் தொழில்நுட்ப திறன், வேலைவாய்ப்பு பெறுதலுக்கான திறன் ஆகியவற்றை மேம்படுத்த கலந்தாய்வு கூடங்கள் நடத்தப்படும். கல்லூரிக்கல்வி இயக்குனரகத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்