உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா? என்பது குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.
சென்னை
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர், மாநில-மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் அந்த கட்சியின் மைய குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர்ராவ் தலைமை தாங்கினார். தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தமிழக இணை பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட மைய குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.
சுற்றுப்பயணம்
கூட்டம் முடிந்ததும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. மைய குழு கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் பற்றியும், கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய நபர்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். நான் மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது பலர் இணைய இருக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. பலமான கட்சியாக வலம் வருவதற்கு அனைத்து முயற்சிகளும் தொடரும். தமிழகத்தில் எதை எடுத்தாலும் அரசியல் ஆக்குகிறார்கள். தேசியத்தின் மூவர்ண நிறம் வர வேண்டும் என்று பாரதியார் தலைப்பாகையை ஓவியர் வரைந்திருக்கிறார். உடனே பாரதியாரின் தலைப்பாகை ‘காவி’ நிறத்தில் இருக்க கூடாது என்று விமர்சனத்தை எடுத்து செல்கிறார்கள்.
‘நீட்’ தேர்வை எழுத விடுங்கள்
‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால் உயிரிழந்த 2 மாணவிகள் குடும்பங்களுக்கு நான் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. எனவே மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக மாணவர்களிடையே அவநம்பிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வை நாங்கள் எடுத்துவிடுவோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். எப்படி அவரால் எடுக்க முடியும்?. ‘நீட்’ தேர்வை மாணவர்களை எழுதவிடுங்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல எண்ணத்தில் பல மாநிலங்களில் தமிழை கற்க வேண்டும் என்று ‘டுவிட்டர்’ பதிவு போட்டார். இது தொடர்பாக தவறாக பிரசாரம் செய்யப்பட்டதால் அந்த கருத்து நீக்கப்பட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன். மற்ற மாநிலங்களில் உள்ளவர்களும் தமிழ் கற்க வேண்டும் என்று நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியால் தொண்டர்கள் துவண்டுவிட கூடாது என்பதால் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நாளை (இன்று) முதல் தமிழகம் முழுவதும் நான் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘உள்ளாட்சி தேர்தலை முதலில் அறிவிக்கட்டும். அதன்பின்னர் அதை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது பற்றி பேசுவோம். இப்போது எங்கள் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி கொண்டிருக்கிறோம்.’ என்றார்.
சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன்
பா.ஜ.க. கொள்கை, விதிகள் படி மாநில தலைவர் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஒருவர் இரண்டு முறை தலைவர் பதவியில் இருக்கலாம். தற்போது தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கால நீட்டிப்பில் தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி மற்றும் நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மத்திய கயிறு வாரிய முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் ஒருவர் தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.