சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை மூடிவிடலாமே? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை மூடிவிடலாமே? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-04-23 22:45 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.ஜெகந்நாத் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் இருந்து சோழர் ஆட்சி கால செம்பு பட்டயங்கள், சிவன், விஷ்ணு, சோழர்கள் போன்ற பாரம்பரியமிக்க பழமையான சிலைகள் அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இவற்றை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட சிறப்பு கூட்டு மீட்புக்குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய கலாசார துறை, தொல்லியல் துறை, வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் கண்டனம்

இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை’ என்று குற்றம்சாட்டினார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுதொடர்பான அரசாணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றார்.

பின்னர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் இருந்த 1,300 ஆண்டுகள் பழமையான மயில் சிலை காணாமல்போனது தொடர்பான வழக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

மூடிவிடலாமே?

பின்னர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், தமிழக அரசு இந்து கோவில்களை மூடிவிடலாமே? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்குகளை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்