பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தவறான தகவல்களை பரப்பியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக மு.க.ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சி-கோவை ரோடு வடக்கிபாளையம் பிரிவில் கடந்த 4-ந் தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி திருமலைசாமி ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. விசாரணையை நேர்மையாக நடத்த விடமாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார். இது நீதி விசாரணையின் போக்கை கொச்சைப்படுத்தியும், அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் இருந்தது.
4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டது யார்? யார்? என விசாரணை இருக்கும் போது 200 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என ஆதாரம் இல்லாமல் தவறான தகவலை பொதுக்கூட்டத்தில் பேசி, அவரது கட்சிக்கு ஆதாயம் தேடுகின்ற வகையில் பொய் பிரசாரம் செய்தார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணான செயலாகும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொய்யான தகவல்களை பரப்புதல், தேர்தல் நடத்தை விதிகளை மீறி கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.