பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலையில் இளைஞர் சதீஷ் கைது

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கில் சதீஷ் என்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2019-04-07 08:43 GMT
பொள்ளாச்சி,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியரான இவருடைய மகள் பிரகதி (வயது 20) கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

கல்லூரி விடுதியில் தங்கி இருந்த இவர் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றபின் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் மாணவியின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவியை தேடினார்கள். ஆனால் மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரம் அவரது உடல் கிடந்துள்ளது.  இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றினர்.

மாணவி பிரகதிக்கும் அவரது உறவினர் நாட்டுதுரை என்பவருக்கும் திருமணம் செய்ய, கடந்த 2 மாதங்களுக்கு முன் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட மாணவியின் உடல் பரிசோதனை கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது.  மாணவியின் கழுத்து, மார்பு என 3 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.  கொலை செய்யப்படுவதற்கு முன் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.  இதன்பின் மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தினை அடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர் சதீஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.  அவர் 4 ஆண்டுகளாக மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்