குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வு நடந்த ஒரு மாதத்தில் டிஎன்பிஎஸ்சி அதிரடி
குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்த ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.
அதில், சப் கலெக்டர்- 27, துணை போலீஸ் சூப்பிரண்டு- 90, வணிகவரி உதவி கமிஷனர்- 18, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்- 13, மாவட்ட பதிவாளர் - 7, கிராம மேம்பாடு உதவி இயக்குனர்- 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 8, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர்- 3 ஆகிய 181 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதற்காக விண்ணப்பிக்க கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 588 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
2 லட்சத்து 30 ஆயிரத்து 588 பேர் விண்ணப்பித்து இருந்ததில், 1,150 பேரின் விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இதையடுத்து, 2 லட்சத்து 29 ஆயிரத்து 438 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த 181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 03-ம் தேதி நடைபெற்றது. 32 மாவட்ட தலைநகரங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு, 773 இடங்களில் இந்த தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 156 இடங்களில் தேர்வு நடைபெற்றது. அதில், 48 ஆயிரத்து 652 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.
இந்நிலையில் இந்த 181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை தேர்வுக்கு, 9850 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வு ஜூலை 12,13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்த ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக வெளியிட்டுள்ளது.