திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-04-01 05:57 GMT
சென்னை,

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை இடமாக திகழ்கிறது. இக்கோவில் பஞ்ச பூதங்களுக்கு உரிய கோவில்களில் பூமிக்குரிய கோவிலாகும். திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் என்ற பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள்.

சர்வ தோஷங்களையும் நீக்கும் பரிகார தலமாக உள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.

தேரை சீராக ஓடச்செய்யும் வகையில் திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்கள், ‘ஹைட்ராலிக்’ பிரேக் தேரில் பொருத்தப்பட்டு உள்ளது.

தேரின் முன்பகுதியில் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி உள்ளிட்ட பொம்மைகளுடன் சேர்த்து அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாகும். தேர் திருவிழாவின்போது மிக பிரம்மாண்டமான ஆழித்தேர் தியாகராஜர் சாமியுடன், கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் வலம் வருவது வழக்கம்.

பல்வேறு சிறப்புகளை பெற்ற ஆழித்தேரோட்ட விழா இன்று காலை 7.10  மணிக்கு  தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆழித்தேருடன், கமலாம்பிகை அம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்தது. ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆழித்தேரோட்ட விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திருவாரூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. திருவாரூர் நகராட்சியின் மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் பல்வேறு இடங்களில் 10 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும்  கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தேரோடும் வீதிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வசதியாக 170 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 4 தீயணைப்பு வாகனங்களும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவசர மீட்பு பணிக்காக தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையில் 10 தீயணைப்பு படைவீரர்களை கொண்ட 2 கமாண்டோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அதேபோல கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு கூட்டத்தை போலீசார் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது.

மேலும் செய்திகள்