தி.மு.க. புகாரால் நிறுத்தப்பட்டுள்ளது தேர்தல் முடிந்தவுடன் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி
தி.மு.க. புகாரால் நிறுத்தப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் நிதி தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வேலூர்,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் இணைப்பு சாலையில் இருந்து தனது 2-வது நாள் பிரசாரத்தை தொடங்கினார். திருப்பத்தூர், ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தி.மு.க., காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்காக கொண்டுவரவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் நீண்ட நாட்கள் மத்திய மந்திரியாகவும், அதனைத் தொடர்ந்து நிதி மந்திரியாகவும் இருந்துள்ளார். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த ஒரு திட்டத்திற்கும் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தது கிடையாது. மாநிலங்களின் நலன் கருதி தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். எனவே, இந்த கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாவதை தடுத்திட பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டி, நீரை தேக்கிவைக்கின்ற ஒரு திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. அதற்காக 4 ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, எங்கெங்கு தடுப்பணைகள் கட்ட முடியும் என்பதை சர்வே செய்து, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது 3 ஆண்டு திட்டமாகும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி பல்வேறு நிறுவனங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தொழில் தொடங்கப்படவுள்ளன. இதனால் 10.50 லட்சம் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் ரூ.2 ஆயிரம்
தைத்திருநாளாம் தைப்பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரூ.1,000 வழங்க கூடாது என தி.மு.க. நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் நீதிமன்றம் ரூ.1,000 வழங்க தடையில்லை என அறிவித்ததின் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதேபோன்று விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் இனத்தைச் சார்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என நான் அறிவித்தேன்.
ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று பிரதமர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் ஒரு திட்டத்தை அறிவித்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் என விவசாயிகளுக்கு அந்த நிதி வழங்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சுமார் 40 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
சந்தர்ப்பவாத கூட்டணி
தி.மு.க. கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. கடந்த தி.மு.க. ஆட்சியில் நிர்வாக திறமையின்மையின் காரணமாக மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகள், தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் பல்வேறு மின் திட்டங்களை அறிவித்து, மின் தட்டுப்பாட்டை அறவே அகற்றி, தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்ததற்கான விருதும் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து குரல் கொடுத்த அரசு அ.தி.மு.க. அரசு. சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருந்து பாடுபடும் அரசு அ.தி.மு.க. அரசு. சிறுபான்மையின மக்களின் நலன் காக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவையை அறிந்து ஜெயலலிதா பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டுவந்து செயல்படுத்தினார்.
காவிரி நீர் பிரச்சினை
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்திய அளவில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. காவிரி நீர் பிரச்சினை வந்தபோது, 23 நாட்கள் நாடாளுமன்றத்திலே தமிழக உரிமைக்காக குரல் கொடுத்து தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட போராடிய கட்சி அ.தி.மு.க. ஆனால், காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா என்றால், நிச்சயமாக இல்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இதை நிறைவேற்றுவோம், அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறுகிறார்கள். இவர்களால் அதைச் செய்ய முடியுமா என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எனவே, திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூர் தொகுதி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கஸ்பா ஆர். மூர்த்தி ஆகியோரை ஆதரித்து ஆம்பூர் பைபாஸ், உமாராபாத், பேரணாம்பட்டு, ஆம்பூர்-குடியாத்தம் கூட்ரோடு ஆகிய இடங்களில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நிலை தான் இந்த தேர்தலிலும் ஏற்படும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அரசை பார்த்து ஊழல் அரசு என்று சொல்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை மறந்து விட்டு தற்போது அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியை குறை கூறுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?. மத்தியில் வலிமையான ஆட்சி இருந்தால் தான் வளமான தமிழகம் இருக்க முடியும் என்பதற்காகத்தான் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.