தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தமிழக தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் அரசியல் கட்சிகளின் ஒரே குரலாக ஒலித்தது.
இப்போது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. அதனுடன் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாஹூ, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என அவர் அறிவித்துள்ளார்.