விரும்பிய சேனல்களுக்கு கட்டணம்: டிராய் உத்தரவை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

விரும்பிய சேனல்களுக்கு கட்டணம் செலுத்தி பெறுவதற்காக டிராய் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு தள்ளி வைத்துள்ளது.

Update: 2019-01-26 20:29 GMT
சென்னை,

‘செட்டாப் பாக்ஸ்’ மூலம் விருப்பமான சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்து சந்தாதாரர்கள் பார்க்கும் வகையில் புதிய அறிவிப்பாணையை மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதன்படி ஜனவரி 31-ந்தேதிக்கு பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே விருப்பமான சேனல்களை பார்க்கமுடியும்.

இந்நிலையில், சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ராமாராவ் (வயது 77), சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 2003-ம் ஆண்டு ‘செட்டாப் பாக்ஸ்’ முறை அமல்படுத்தப்பட்ட போது விரும்பிய சேனல்களுக்கு ரூ 4.65 கட்டணம் என்றும் இந்த கட்டணம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை 7 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது சுமார் 1 கோடி பேருக்கு மேற்பட்டவர்கள் டி.வி.யை பயன்படுத்துகின்றனர். இதில், 46 லட்சம் பேர் மட்டுமே செட்டாப் பாக்ஸ் முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

மீதமுள்ள 54 சதவீத சந்தாதாரர்கள் இன்னும் கேபிள் முறையையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் விரும்பிய சேனல்களை கட்டணம் செலுத்தி பெறுவதற்கான காலக்கெடு ஜனவரி 31-ந்தேதி என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கவேண்டும். அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ரமாபிரியா கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந்தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்