தமிழகம் முழுவதும் தொடர் கடையடைப்பு போராட்டம் விக்கிரமராஜா பேட்டி

தமிழகம் முழுவதும் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.

Update: 2019-01-07 21:30 GMT
கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதை சரிவர பின்பற்றாத ஒரு சில அதிகாரிகள் சில்லரை வணிகர்களின் கடையில் புகுந்து பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள, 5 லட்சம் சில்லரை வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் புகார் மனு அளித்துள்ளோம். தமிழகத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கவரில் வைத்து விற்பனை செய்கின்றனர். இதை தமிழக அரசால் தடை செய்ய முடியவில்லை. அயல் நாட்டு நிறுவனத்துக்கு அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.

தமிழகத்தில் சில்லரை வணிகத்தை காப்பாற்ற வணிகர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதன் பிறகும் சில்லரை வணிகர்களை அதிகாரிகள் நசுக்கும் செயலை நிறுத்தாவிட்டால், பொங்கலுக்கு பிறகு தமிழகம் முழுவதும் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்