மூளைச்சாவு அடைந்த நெல்லை வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது

மூளைச்சாவு அடைந்த நெல்லை வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

Update: 2019-01-06 20:17 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டானா காளிபார்விளையை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 35). எம்.காம். படித்துள்ள இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பழனிக்குமாரை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் பழனிக்குமார் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இதைத்தொடர்ந்து பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாயார் சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கு இதயத்தையும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு மற்றொரு சிறுநீரகமும், திருச்சி தனியார் ஆஸ்பத்திரி நோயாளிக்கு கல்லீரலையும் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

மேலும் அந்தந்த ஆஸ்பத்திரிகளில் இருந்து டாக்டர்கள் குழுவினர் உடல் உறுப்புகளை பெற்றுச்செல்ல நெல்லை வந்தனர்.

மதியம் 2.20 மணிக்கு பழனிக்குமாரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. முதலில் இதயம் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டு 2.54 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அதுவரை சாலையில் எந்தவித இடையூறுகளும் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து போலீசார் உதவியுடன், அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு இதயம் பொருத்தப்பட்டது. இதேபோல் மற்ற ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளுக்கும் தானமாக பெறப்பட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டன.

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்து வந்தாலும், பழனிக்குமாரின் உடல் உறுப்புதான் முதன் முதலாக தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்