34 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு அனுமதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ரூ.14 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்குவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் 34 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2018-12-25 00:15 GMT
சென்னை,

2019-ம் ஆண்டுக் கான தமிழக சட்ட சபையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரை 1¼ மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அமைச்சரவை கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநில அரசு அணை கட்டும் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச் சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முக்கியமாக, தமிழகத்தின் தொழில் முன்னேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான விரிவாக் கம் மற்றும் புதிய நிறுவனங்களுக்கான அனுமதி ஆகியவை பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடு மற்றும் இந்தியாவில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தமிழக அரசுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ள இருக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

அமைச்சரவையின் இந்த முடிவின் மூலம், முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசுடன் புதிய தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து உள்ளார். அதன்படி, தொழில் தொடங்குவதற்கான அனுமதியை ஒரே நேரத்தில் எளிதாக பெறும் வகையில் ஒற்றைச்சாளர முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய அனுமதி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், இதன்மூலம் 34 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் சில அரசியல் விவகாரங்கள் குறித்தும் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

அப்போது, அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை இணைக்க இருப்பதாக வரும் தகவல்கள் பற்றி விவாதித்ததாகவும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தவிர, அந்த கட்சியில் உள்ள மற்றவர்கள் யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்க்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை அறிவிப்பாக அ.தி. மு.க. தலைமை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் வற்புறுத்தியதாகவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செய்திகள்