பெண்கள் பாதுகாப்புக்கு 181 இலவச தொலைபேசி சேவை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

பெண்கள் பாதுகாப்புக்கு என்று 181 இலவச தொலைபேசி சேவையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

Update: 2018-12-09 20:00 GMT

சென்னை, 

பெண்கள் பாதுகாப்புக்கு என்று 181 இலவச தொலைபேசி சேவையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

மத்திய அரசு திட்டம்

டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரத்துக்கு பலியானது நாட்டையே உலுக்கியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிப்பதற்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த சேவை டெல்லி, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் 181 சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் இன்று (திங்கட்கிழமை) முதல் செயல்பட தொடங்க உள்ளது. இதனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

சட்டம் மற்றும் மருத்துவ வல்லுனர்கள்

181 சேவையின் நன்மைகள் குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள், ‘ஈவ்–டீசிங்’ போன்றவை தொடர்பாக புகார் தெரிவிக்கவும், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளி–கல்லூரிகளில் வழங்கப்படும் ‘ஸ்காலர்ஷிப்புகள்’, உடல் மற்றும் மனநலம் தொடர்பான ஆலோசனைகள் குறித்து கேட்டறியவும் 181 சேவையை பெண்கள் பயன்படுத்தலாம்.

இந்த மையத்தை நிர்வகிப்பதற்காக ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர், 5 சட்ட வல்லுனர்கள், 5 மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு

காவல், மருத்துவம், சட்டம் ஆகிய துறைகளின் உதவிகளும் மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்களும் 181 மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே 181 சேவையை பயன்படுத்தும் பெண்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘மீ டூ’ விவகாரம், கும்பக்கோணத்தில் வடமாநில இளம்பெண் கற்பழிப்பு சம்பவம், ஒரு தலை காதல் கொலைகள் என தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தலைதூக்கி வரும் வேளையில் 181 சேவை தொடங்கப்பட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்