ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவுதினம்: சென்னையில், 5-ந்தேதி அ.தி.மு.க.வினர் ஊர்வலம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, சென்னையில் வருகிற 5-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் நினைவு ஊர்வலம் நடத்துகிறார்கள்.
சென்னை,
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, சென்னையில் வருகிற 5-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் நினைவு ஊர்வலம் நடத்துகிறார்கள்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாக வீற்றிருக்கும் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய தினம் 5.12.2016.
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர், மகளிர் மற்றும் மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி,
அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.