புயல் பாதித்த 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்ய கட்டணம் கிடையாது; சுகாதார துறை

புயல் பாதித்த 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்ய கட்டணம் கிடையாது என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Update: 2018-11-25 09:06 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின.  இந்த புயலால் தென்னை, பலா மற்றும் பழமை வாய்ந்த மரங்கள் சாய்ந்தன.  லட்சக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

இதனை தொடர்ந்து நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.  தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  அவரிடம் புயல் நிவாரணத்திற்கு உதவியாக ரூ.15 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு ஒன்று தமிழகம் வந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், புயல் பாதித்த புதுக்கோட்டையில் ஸ்கேன் செய்ய சென்ற மூதாட்டியிடம் அதற்காக கட்டணம் கேட்கப்பட்டது.  அதனை செலுத்த அவரிடம் வசதியில்லை.  இதுபற்றிய செய்தி ஊடகத்தில் வெளியான நிலையில் அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

கடுமையாக புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15ம் தேதி வரை கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்