சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக மழை போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. மாலை நேரத்தில் பெய்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2018-11-22 23:54 GMT
சென்னை,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 2 நாட்களாக வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டு இருந்தது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்பட வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 21-ந்தேதி பிற்பகல் முதல் மழை பெய்ய தொடங்கியது. அன்றைய தினம் இரவு வரை சாரல் மழையும், அவ்வப்போது நல்ல மழையும் பெய்தது.

நேற்று முன்தினம் அதிகாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்ய ஆரம்பித்த மழை நேற்று இரவு வரை நீடித்தது. இரவில் மழை சற்று குறைவாக இருந்தது.

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

அதிகாலையில் பல இடங்களில் சட சடவென்று மழை பெய்தது. அதன்பின்னர், காலையில் இருந்து கருமேகங்களுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தூவான மழையும், சில இடங்களில் சூரியன் மேகத்துக்குள் மறைந்தும், அவ்வப்போது வெளியே வந்து ஒளி வீசியும் காணப்பட்டது.

மாலை 4 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, பெரம்பூர், பாண்டிபஜார், தியாகராயநகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, அண்ணாநகர், மந்தைவெளி, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல், பாரிமுனை, வியாசர்பாடி, திரு.வி.க.நகர் உள்பட பல்வேறு இடங்களிலும், புறநகர் பகுதிகளில் சில இடங்களிலும் இடைவெளி விட்டு மழை பெய்தது.

மாலையில் மழை பெய்து நின்ற சில நிமிடங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நத்தை வேகத்தில் நகர்ந்து சென்றதால் கடும் அவதிக்குள்ளாகினார்கள். சில இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக சாலைகளை கடந்து சென்றனர்.

தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள ஜோதி வெங்கடாச்சலம் சாலை உள்பட சில இடங்களில் முட்டளவு தண்ணீர் தேங்கி இருந்தது. தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சென்னையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) இடைவெளி விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

மேலும் செய்திகள்