சேத பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட விமர்சனம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Update: 2018-11-22 05:54 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்து உள்ளது.

‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுவருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 6.03 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை 9.45 மணிக்கு அவருடைய இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.   பிரதமர் வீட்டில் நடந்த சந்திப்பின் போது, கஜா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விளக்கினார்.   புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்  வைத்து உள்ளார். புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி, இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்து உள்ளார். சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழு விரைந்து தமிழகம் வர கோரிக்கை வைத்து உள்ளார். வர்தா, ஒக்கி புயல் நிவாரணத் தொகையில் உள்ள நிலுவையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை  வைத்து உள்ளார்.

பின்னர்  எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால்  தமிழகத்தின் பல மாவடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பிரதமரிடம் சேத மதிப்பு குறித்த மனு அளிக்கப்பட்டு உள்ளது இடைக்கால நிவாரணமாக  ரூ 1500 கோடி உடனடியாக வழங்க கோரிக்கை வைத்து உள்ளோம். நிரந்தர நிவாரணமாக  ரூ. 15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம். கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்து உள்ளோம்.  

தமிழகத்தில் ஆய்வு நடத்த விரைவில் மத்திய குழு வரும் என பிரதமர் மோடி உறுதி அளித்து உள்ளார். 

கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயலுக்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர் . கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு. அதிமுக அரசை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. தி.மு.க அரசை விட அ.தி.மு.க அரசு நிவாரண தொகையை அதிகம் வழங்குகிறது.

நிவாரண பணிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். குறிப்பாக மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர்.

புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது குறித்து  மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

சாலை வழியாக சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களுக்கு சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார்.  3 இடங்களுக்கு சென்றார். பின்னர் பாதியிலேயே திரும்பி விட்டார்.  அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால் ஹெலிகாப்டரில்  சென்றேன். ஹெலிகாப்டரில் சென்றதால்தான்   புயல் பாதிப்பு முழுமையாக தெரிந்தது. பாதிக்கப்பட்ட இடங்கள்  பலவற்றை நாங்கள் புகைப்படம் எடுத்து உள்ளோம் என எடுத்த புகைப்படங்களை காட்டினார்.

மேலும் செய்திகள்