தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் 3 நாட்களில் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

Update: 2018-11-04 23:00 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக கடந்த 2-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (திங்கட்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்தது.

இதையடுத்து பலர் வெள்ளிக்கிழமையன்றே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து 3-ந் தேதி, நேற்றும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பயணிகள் கூட்டம் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் அலைமோதியது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையங்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

இந்தநிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து அரசு பஸ்கள் மூலம் கடந்த 2-ந் தேதி ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 162 பயணிகளும், 3-ந் தேதி 2 லட்சத்து 23 ஆயிரத்து 178 பயணிகளும், இன்று(நேற்று) ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 902 பயணிகளும் என மொத்தம் 5 லட்சத்து 16 ஆயிரத்து 242 பேர் இதுவரை சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 5 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணம் செய்திருந்தனர். இந்த ஆண்டு 6 லட்சத்து 25 ஆயிரம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

1,431 ஆம்னி பஸ்களில் ஆய்வு நடத்தப்பட்டு, ரூ.31 லட்சத்து 17 ஆயிரம் பிணைக் கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்த 10 பஸ்களில், கூடுதல் தொகையை அந்தந்த பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பஸ்களை போன்று ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்கள் அனைத்திலும் கட்டுக்கு அடங்காத பயணிகள் கூட்டம் இருந்தது. குறிப்பாக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது. போலீசாரும் தீவிரமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். பயணிகள் போர்வையில் சமூகவிரோதிகள் யாராவது நடமாடுகிறார்களா? என்பதை கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்