மணல் விலையை கட்டுப்படுத்த மலேசிய நாட்டு மணல் உதவும் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் நம்பிக்கை

மணல் விலையை கட்டுப்படுத்த மலேசிய நாட்டு மணல் உதவியாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் அ.வீரப்பன் கூறினார்.

Update: 2018-10-05 21:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மலேசிய நாட்டில் இருந்து 58 ஆயிரத்து 616 டன் ஆற்று மணலை, கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காம ராஜர் துறைமுகத்திற்கு தமிழக அரசு கொண்டு வந்து உள்ளது.

இந்த மணல், அரசின் கொள்கை முடிவுப்படி பொதுப்பணித்துறை மூலமே விற்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் அ.வீரப்பனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மலேசிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையை வரவேற்கிறீர்களா? ஏன்?

பதில்:- மலேசிய நாட்டு மணல் இறக்குமதியை முழுமனதோடு வரவேற்கிறேன். ஏனென்றால் இந்த முயற்சி, நம் ஆற்றுமணல் தட்டுப்பாட்டை ஓரளவு குறைக்கும். மேலும் மணல் விலையை கட்டுப்படுத்தும். இதன்மூலம் மணல் விலை குறையும்.

கேள்வி:- மலேசிய நாட்டு மணல் தரமானதாக இருக் குமா?

பதில்:- கண்டிப்பாக தரமானதாக இருக்கும். தமிழக அரசின் ஏற்பாட்டில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தரம் நிறைந்ததாக இருக்கும். மண்ணின் தரத்தை சோதனை செய்து தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுப்பணித்துறை மூலமாக, மணல் வரவழைக்கப்பட்டு பொதுவெளியில் விற்கப்படுவதால், மலேசிய மணல் தரமானதாகவே இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

கேள்வி:- இறக்குமதி மணல் விற்பனையை தமிழ்நாடு மணல் லாரி ஒப்பந்ததாரர்கள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

பதில்:- அவர்களுடைய பிழைப்பு வணிகம். வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சொல்லியே எதிர்க்கிறார்கள். எண்ணூர், காம ராஜர் துறைமுகத்தில் இருந்து இந்த மணலை ஏற்றி வெளிச்சந்தைக்கு, தனிப்பட்டவர் தேவைக்கு கொண்டு சேர்ப்பவர்களும் இந்த மணல் லாரிக்காரர்களே. இப்படி இருக்கும்போது அவர்களின் எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. ஆற்று மணல் மாபியாக்களுக்கு துணை போகிறவர்களும், மணல் விலையை அதிகமாக ஏற்றியவர்களும் இவர்களே. இந்த அடிப்படையில் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆற்றுமணலை அளவுக்கு மீறி அள்ளி விற்பதே மோசமான கொள்கை. வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதன் கெடுதலால் தான் இன்றைக்கு குடிநீர் தட்டுப்பாட்டால் அல்லாடுகிறோம்.

கேள்வி:- நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதுகாப்பது?

பதில்:- பொதுவாகவே கட்டுமானத்தொழிலுக்கு ஆற்றுமணலின் தேவையை பெருமளவில் குறைத்துக்கொள்ள வேண்டும். கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களை போலவே தமிழ்நாடும் செயற்கை மணலையும் (எம்.சாண்ட்), கருங்கல் உடை தூளையும், கட்டுமானத்தொழிலில் பயன்படுத்தலாம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நம் ஆறுகளின் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்