பக்கவாட்டு சுவர் இடிப்பது பற்றி ஆய்வுக்கு பின் முடிவு; ரெயில்வே பாதுகாப்பு குழு ஆணையர் பேட்டி

சென்னை பரங்கிமலை ரெயில்வே நிலையத்தில் ஏற்பட்ட விபத்தினை அடுத்து அதன் பக்கவாட்டு சுவரை இடிப்பது பற்றி ஆய்வுக்கு பின் முடிவு செய்யப்படும் என ரெயில்வே பாதுகாப்பு குழு ஆணையர் கூறியுள்ளார்.

Update: 2018-07-25 06:37 GMT
சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில்வே நிலையத்தில் ஏற்பட்ட விபத்து பற்றி விசாரணை மேற்கொள்ள பெங்களூருவில் இருந்து பாதுகாப்பு குழு ஆணையர் வருகை தந்துள்ளார்.

சென்னையில் கோடம்பாக்கம் முதல் மாம்பலம் இடையே புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் பகுதியில் நேற்று காலை உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.  இதனால் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாக ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  இதனால் புறநகர் ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டன.

குறைவான ரெயில்களின் இயக்கம், காலதாமதம் ஆகியவற்றால் பயணிகளின் கூட்டம் அதிகரித்து ரெயில்களில் நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற ரெயிலில் கூட்ட நெரிசலால் படியில் தொங்கியபடி பலர் பயணம் செய்துள்ளனர்.  அவர்களில் 4 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பக்கவாட்டு சுவரில் மோதி அடிபட்டு கீழே விழுந்து பலியாகி உள்ளனர்.

அவர்களில் பிரவீன் குமார், பரத், சிவகுமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர்.  இந்நிலையில் 4வது நபரின் அடையாளமும் இன்று தெரிய வந்தது.  அவர் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தினை சேர்ந்த வேல்முருகன் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், ரெயிலில் இருந்து கீழே விழுந்து 4 பேர் பலியான விபத்து பற்றி விசாரணை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு குழு ஆணையர் மனோகரன் பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ளார்.

அவர் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மாற்று பாதையில் மின்சார ரெயில் இயக்கியபொழுது விபத்து நேரிட்டுள்ளது.  படியில் தொங்கியபடி பயணம் செய்யும் பொதுமக்கள் அனைவரும் அதனை தவிர்க்க வேண்டும் என கூறினார்.

ரெயில் நிலையத்தில் சம்பவம் நடந்த பக்கவாட்டு சுவர் அளவிடப்பட்டு வருகிறது.  அவற்றை இடிப்பது பற்றி முழுமையான ஆய்வுக்கு பின் முடிவு செய்யப்படும்.

இந்த சம்பவத்தினை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.  மும்பையில் உள்ளது போன்று பக்கவாட்டு சுவரின் அளவை குறைப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்