படிக்காமல் செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர்: மாணவன் எடுத்த விபரீத முடிவு

தொடர் மழையால் தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த வாரம் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

Update: 2024-12-16 22:24 GMT

கோப்புப்படம்

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே தேர்வுக்கு படிக்காமல் செல்போனை பார்த்து பொழுதை கழித்த மகனை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அகமதுகபீர். இவரது 3வது மகன் இர்ஷாத் (16). மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை தேர்வுக்காக மாடியில் படித்துக்கொண்டு இர்ஷாத் வெகுநேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் இர்ஷாத்தின் சகோதரர் மாடிக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அங்கு சேலையில் தூக்கு மாட்டிக் கொண்ட நிலையில் இர்ஷாத் இருந்துள்ளார். உடனடியாக இர்ஷாத்தை மீட்ட அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இர்ஷாத் இறந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இர்ஷாத் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. விடுமுறை நாளில் தேர்வுக்கு படிக்காமல் செல்போனை பார்த்து பொழுதை கழித்து வந்துள்ளார் இர்ஷாத். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இர்ஷாத் மாடியில் துாக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்