அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்
அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
புதுப்பிக்கத்தக்க மற்றும் அனல் மின்சாரம் வழங்குவதற்காக அதானி குழுமத்திற்கு மராட்டிய அரசு வழங்கிய ஒப்பந்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
முன்னதாக இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், அதானி நிறுவனத்துக்கு மின்வினியோக ஒப்பந்தம் வழங்கியது நியாயமான முறையில் மின்சாரம் பெறும் தனது அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இதேபோல மின்வினியோக ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய துணை முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய, நீதிபதி அமித் போர்கர் அடங்கிய அமா்வு முன் நடந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதில் உள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்தனர். மேலும் அவர்கள், "இதுபோன்ற ஆதாரமில்லாத, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுடன் கூடிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது சில நேரங்களில் நல்ல விஷயங்களை கூட நடத்த விடாமல் தடுத்து விடும். முன்னாள் முதல்-மந்திரி ஊழலில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரமும் மனுவில் இல்லை. மனுதாரர் டெண்டரிலும் பங்கேற்கவில்லை. மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை, தெளிவற்ற குற்றச்சாட்டுகள் தான் உள்ளன" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.