ரூ.824 கோடி வங்கி மோசடி: சென்னையில் நகைக்கடை அதிபர் கைது

வங்கியில் ரூ.824.15 கோடி கடன் பெற்று மோசடி செய்த நகைக்கடை அதிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-25 22:15 GMT
சென்னை, 

சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் 14 வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.824.15 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது. இதுதொடர்பாக ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ (எஸ்.பி.ஐ.) வங்கி கூட்டமைப்பு சென்னை மண்டலத்தின் பொது மேலாளர் ஜி.டி. சந்திரசேகர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இணை இயக்குனருக்கு 16 பக்கத்தில் புகார் கடிதம் அனுப்பினார்.

அதன்பேரில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி நீதா ஜெயின், பங்குதாரர்கள் தேஜ்ராஜ் அச்சா, அஜய்குமார் ஜெயின், சுமித் கேடியா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்னை வந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள பூபேஷ்குமார் ஜெயின் வீடு, தியாகராயர்நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள அலுவலகம் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

பெங்களூரு சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து பூபேஷ்குமார் ஜெயின், அவருடைய மனைவி நீதா ஜெயின் ஆகியோரிடம் மோசடி பற்றி பெங்களூரு சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது. பூபேஷ்குமார் ஜெயின் சொத்துகளை ஏலம் விடுவதற்கான முயற்சியில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

வங்கி மோசடி வழக்கு அமலாக்கத்துறை கைவசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகத்தில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி மதிப்பிலான நகை பட்டறையை அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.

இந்தநிலையில் பூபேஷ்குமார் ஜெயினை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஆயிரம் விளக்கு அலுவலகத்துக்கு நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதன்படி அவரும் விசாரணைக்கு ஆஜராகினார்.

அவரிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரித்தனர். விசாரணை முடிவில் பூபேஷ்குமார் ஜெயின் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்